உலகம்

தைவானில் ஆஸ்பத்திரியில் தீப்பிடித்து 9 பேர் பலி

Published On 2024-10-04 02:15 GMT   |   Update On 2024-10-04 02:15 GMT
  • ஆஸ்பத்திரிக்குள் வெள்ளம் புகுந்ததால் நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
  • படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தைவானின் தெற்கு பிராந்தியத்தை கிராதான் புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

இதனை தொடர்ந்து பெய்த கனமழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

இதற்கிடையே கிராதான் புயலால் பிங்டங் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி கடுமையாக சேதமடைந்தது. அப்போது ஆஸ்பத்திரிக்குள் வெள்ளம் புகுந்ததால் நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த உபகரணங்களை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

அப்போது திடீரென அந்த ஆஸ்பத்திரியில் தீப்பிடித்து கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த புகையை சுவாசித்த பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

எனினும் இந்த தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ஆஸ்பத்திரியில் உள்ள உபகரணங்களை அப்புறப்படுத்தும்போது ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்தது தெரிய வந்துள்ளது.

Similar News