காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்.. குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு
- சிறுமி உட்படப் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ஐ.நா.வின் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வண்ணம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இரண்டு புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீன நகரமான காசா இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்துள்ள நிலையில் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்றைய தினம் மத்திய காசாவில் அழ- புரெஜ் [Al-Bureij] அகதி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் டெய்ர் அல் பாலா பகுதியில் உள்ள நஸ்ரேத் முகாமில் உள்ள அல்- அவ்தா [Al-Awda] மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் சிறுமி உட்படப் படுகாயமடைந்தவர்களுக்கு அம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெய்ர் அல் பாலா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெயர்ந்தோர் தஞ்சமடைந்த மசூதி மற்றும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குகளில் 26 பேர் உயிரிழந்தனர். 93 பேர் படுகாயமடைந்தனர். நேற்று காலை மத்திய காசா மற்றும் வடக்குப் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
மத்திய காசா பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இதற்கு மத்தியில் ஐ.நா.வின் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வண்ணம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இரண்டு புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.