காசாவில் பிணைக்கைதிகளை அடைத்து வைத்த சுரங்கப்பாதை: வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்
- ஏற்கனவே 33 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
- ஹமாஸ் அமைப்பினரிடம் 90-க்கும் அதிகமாக பிணைக்கைதிகள் உள்ளனர்.
ஜெருசலேம்:
இஸ்ரேல்-ஹமாஸ் போர் 10 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்தப் போரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.
சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாக கடந்த ஆண்டு நவம்பரில் ஒருவார காலம் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதற்கு ஈடாக ஹமாசிடம் இருந்த 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல், அங்கு சிக்கியுள்ள பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பிணைக்கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது. அவர்களில் இஸ்ரேலிய-அமெரிக்கரான கோல்ட்பர்க்-போலினும் ஒருவர். தங்கள் வீரர்கள் சுரங்கம் சென்றடைவதற்கு சற்று முன் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாக கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்களில் 5 வயதிற்கு உட்பட்ட 2 குழந்தைகளும் ஆவார்கள். ஏற்கனவே 33 பேர் உயிரிழந்ததாக இஸ்ரே் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் 6 பிணைக்கைதிகள் கொல்லப்பட்ட சுரங்கப்பாதையின் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் இன்று வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காசா சுரங்கப்பாதையின் காட்சிகள் பிணைக்கைதிகள் குடும்பங்களுக்குக் காட்டப்பட்டன. அந்தச் சூழ்நிலைகளில் தங்கள் அன்புக்குரியவர்கள் எப்படி உயிர் பிழைத்தார்கள் என்பதைப் பார்ப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது என தெரிவித்தார்.