உலகம் (World)

லெபனான் மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறோம்: இஸ்ரேல் ராணுவ தளபதி

Published On 2024-09-26 02:35 GMT   |   Update On 2024-09-26 02:48 GMT
  • ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவை குறிவைத்து சக்தி வாய்ந்த ஏவுகணையை வீசினர்.
  • ஏவுகணையை நடுவானில் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடான லெபனானுக்கும் இடையே தீராப்பகை நிலவியது. குறிப்பாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடுக்க தொடங்கிய நாளில் இருந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துகிறது. இருதரப்பு மோதல் பிராந்திய அளவில் பெரிய போராக வெடிக்கும் அபாயம் இருப்பதாக உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே சமயத்தில் வெடிக்க செய்யப்பட்டன. இந்த கோர சம்பவத்தில் 39 பேர் பலியாகினர். சுமார் 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கொடூர தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டிய ஹிஸ்புல்லா அமைப்பினர் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.

லெபனானின் எல்லையையொட்டிய இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை குறிவைத்து தாக்குதல்களை முடுக்கிவிட்டனர்.

அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் 150-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இதனால் கோபமடைந்த இஸ்ரேல் இதுவரை இல்லாத அளவுக்கு லெபனான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது. கடந்த 2 நாட்களில் லெபனானில் 1,600-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் 560-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவை குறிவைத்து சக்தி வாய்ந்த ஏவுகணையை வீசினர்.



இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தை இலக்காக கொண்டு ஈரானில் தயாரிக்கப்பட்ட காதர் என்கிற நடுத்தர தூர ஏவுகணையை வீசினர். எனினும் அந்த ஏவுகணையை நடுவானில் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

எனினும் இதுவரை இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை மட்டுமே இலக்காக கொண்டு ராக்கெட் குண்டுகளை வீசி வந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் தலைநகரை நோக்கி சக்தி வாய்ந்த ஏவுகணையை வீசியது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், லெபனானில் சாத்தியமான தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேலிய இராணுவம் தயாராகி வருவதாக இஸ்ரேலிய ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ராணுவ தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி மேலும் கூறுகையில், சமீபத்திய வான்வழித் தாக்குதல்கள் ராணுவம் சாத்தியமான நுழைவுக்கான தரையைத் தயார்படுத்துவதற்கும், ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து வீழ்த்துவதற்கும்" வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார்.

ஹிஸ்புல்லா தனது தீ வரம்பை விரிவுபடுத்தியுள்ளது, இதனால், அவர்கள் மிகவும் வலுவான பதிலைப் பெறுவார்கள் என்று கூறினார். 

Tags:    

Similar News