உலகம்

மத்திய காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலி

Published On 2024-06-03 15:01 GMT   |   Update On 2024-06-03 15:01 GMT
  • இஸ்ரேல் மூன்று வகையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளது.
  • போர் நிறுத்தத்திற்கான நேரம் இது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.

இஸ்ரேல் காசா மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ரஃபா மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ராணுவம் மூன்று வடிவிலான போர் நிறுத்தத்தை முன்வைத்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார். மேலும், போரை நிறுத்துவதற்கான நேரம் இது. இஸ்ரேல் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்கான திறன் ஹமாஸிடம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஞாயிறு நள்ளிரவும் மற்றும் திங்கட்கிழமை காலையில் மத்திய காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பெண் ஒருவர், மூன்று குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை நள்ளிரவு புரைஜி முகாம் அருகில் உள்ள வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். நுசெய்ரத் முகாமில் தாக்குதப்பட்ட தாக்குதலில் பெண் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி கடத்தி செல்லப்பட்டதாக கருதப்படும் பிணைக்கைதிகளில் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவில் மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள ரஃபா நகரின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் உணவு, மருத்துவ வசதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

காசா மீது நடத்தப்படும் தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். 250 பேரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றது.

Tags:    

Similar News