மலேசியா பெண்ணிடம் இருந்து அழகு ராணி பட்டம் பறிப்பு: சமூக வலை தளங்களில் வீடியோ வெளியானதால் சர்ச்சை
- முகம் சுழிக்கும் வகையில் அரை குறை ஆடை அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.
- நடன நிகழ்ச்சியால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்:
அரைகுறை ஆடை அணிந்த ஆண் நண்பர்களுடன் நடனமாடிய மலேசிய பெண் தனது அழகு ராணி பட்டத்தை இழந்து உள்ளார். அவரது பெயர் விரு நிக்காஹ் டெரின்சிப் (வயது 24). இவர் சமீபத்தில் நடந்த மலேசிய அழகு ராணிக்கான போட்டியில் வெற்றி வாகை சூடி சிறந்த அழகி பட்டம் பெற்றார்.
இந்த நிலையில் இவர் தாய்லாந்து நாட்டுக்கு விடுமுறையில் சுற்றுலா சென்ற இடத்தில் ஆண் நண்பர்களுடன் நடனமாடினார். அவர்கள் முகம் சுழிக்கும் வகையில் அரை குறை ஆடை அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான சமூக வலை தளங்களில் வீடியோ வைரலானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அழகிக்கு எதிராக சர்ச்சை கருத்துகளும் பதிவிடப்பட்டன. இதையடுத்து விரு நிக்காஹ் டெரின்சிப்பிடம் இருந்து மலேசிய அழகு ராணி பட்டத்தை திரும்ப பெறுவதாக நிகழ்ச்சி நடத்திய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கடகாண்டு சுன் கலாச்சார சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஜோசப் பைரீன் கிட்டிங்கன் கூறும் போது விரு நிக்காஹ் சாதாரண பெண்ணாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அழகு ராணி பட்டம் வென்றவர்.
நடன நிகழ்ச்சியால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் எங்கள் முடிவை ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம்.
இது போன்ற தவறை மீண்டும் யாரும் செய்யாமல் இருக்க இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.
இதனை ஏற்று விரு நிக்காஹ் டெரின்சிப் தான் வாங்கிய அழகு ராணி பட்டத்தை திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்.