- சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்
- இவ்வருட தேசிய கல்வி தின கருப்பொருள் "புதுமையை ஏற்றல்"
சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்தவர், மவுலான அபுல் கலாம் ஆசாத். 1947 ஆகஸ்ட் 15லிருந்து 1958 பிப்ரவரி 2 வரை அவர் இப்பதவியை வகித்தார்.
அபுல் கலாம் ஆசாத்தின் நினைவாக அவர் பிறந்த தினமான நவம்பர் 11, ஆண்டுதோறும் தேசிய கல்வி தினம் (National Education Day) என இந்திய அரசால் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பத்திரிகையாளர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல்வாதி, கல்வியாளர் என பன்முக ஆற்றல் கொண்டவர் அபுல் கலாம் ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்தியாவின் பெருமைமிகு மகனான அபுல் கலாம் ஆசாத், கல்விக்கு ஆற்றிய அரும்பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவரது ஆற்றலை நினைவுகூரும் வகையிலும், அவரது பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் "தேசிய கல்வி நாள்" என கொண்டாட இந்திய அரசு முடிவெடுத்துள்ளது" என 2008 நவம்பர் 11 அன்று தேசிய மனிதவள துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தியாவின் பல கல்வி நிறுவனங்களில் கல்வியின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கங்கள், பட்டி மன்றங்கள், உரையாடல்கள், சந்திப்புகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும். பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு அவர்களின் ஆற்றலை வளர்க்கும் வகையில் கதை, கட்டுரை, விவாதம், பேச்சு உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெறும்.
புதுமையான திட்டங்களையும், வழிமுறைகளையும் சிந்திக்கவும், செயல்படுத்தவும், இந்தியர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக, 2023க்கான தேசிய கல்வி தின கருப்பொருளாக (theme) "புதுமையை ஏற்றல்" (Embracing Innovation) முன்னிறுத்தப்பட்டுள்ளது.
1888 நவம்பர் 11 அன்று சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் பிறந்த ஆசாத், 1958 பிப்ரவரி 22 அன்று இந்திய தலைநகர் டெல்லியில் காலமானார்.
1992ல் அவருக்கு இந்திய அரசாங்கம் "பாரத ரத்னா" (Bharat Ratna) எனும் இந்தியாவின் உயரிய விருதை (இறப்புக்கு பின்) வழங்கி கவுரவித்தது.
இந்தியாவில் கல்வியறிவு 75 சதவீதம் உள்ளதாகவும், அதிகபட்சமாக கேரளாவில் 93 சதவீதமும், குறைந்த அளவாக பீகாரில் 61 சதவீதம் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.