மகளின் மண முடிவை ஏற்க மறுத்த பெற்றோரின் விபரீத செயல்
- குடும்ப உறவினரை சமன் திருமணம் செய்து கொள்ள மறுத்தார்
- சமன், தன் ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்
இத்தாலி (Italy) நாட்டில் பொலோக்னா (Bologna) நகருக்கு அருகே நொவெல்லாரா (Novellara) பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த சமன் அப்பாஸ் (18) தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
2020ல் உறவுக்கார ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு சமனை அவர் குடும்பத்தினர் வற்புறுத்தி வந்துள்ளனர். அதை அவர் மறுத்ததால் ஏற்பட்ட சச்சரவின் விளைவாக அந்நாட்டு அரசிடம் புகலிடம் தேடிய சமன், ஒரு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.
கடந்த 2021ல், தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த சமன், வீட்டில் இருந்த தனது பாஸ்போர்ட்டை எடுத்து கொள்ள அங்கு சென்றார். அப்போது மீண்டும் திருமண சர்ச்சை ஏற்பட்டது. அவர் பெற்றோர் சமனின் ஆண் நண்பரை மருமகனாக ஏற்க மறுத்தனர்.
அன்றிலிருந்து சமன் திடீரென மாயமானார். ஆண் நண்பர் இது குறித்து காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் அவர்கள் சமனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முற்பட்டனர்.
ஆனால், சமனின் பெற்றோர் தங்கள் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.
அப்பகுதியில் இருந்த வீடியோ காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று கையில் மண்வெட்டி, கடப்பாரை, பக்கெட் உள்ளிட்டவைகளுடன் 5 பேர் அவ்வீட்டை விட்டு வெளியே சென்று சுமார் 3 மணி நேரம் கழித்து திரும்புவது தெரிய வந்தது.
காவல்துறையினரின் தேடலில் ஒரு வருடம் கழித்து சமனின் உடல் ஒரு பாழடைந்த பண்ணை வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடலில் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டிருந்தது.
இவ்விவகாரத்தில் கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்த இத்தாலி அரசின் கோரிக்கைக்கு இணங்க பாகிஸ்தானிலிருந்த சமனின் தந்தையும், பிரான்சில் இருந்த சமனின் மாமாவும் இத்தாலிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். தாயார் வேறு எங்கோ தப்பி ஓடி விட்டார்.
குடும்பத்தினரிடம் காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், சமனின் பெற்றோர், தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள மறுத்த மகளை கொலை செய்ய திட்டம் தீட்டினர். சமனின் கழுத்தை அவளது மாமா நெரித்து கொலை செய்துள்ளார்.
இவ்வழக்கில் தந்தைக்கும் தாய்க்கும் ஆயுள் தண்டனையும், கொலை செய்த சமனின் மாமாவிற்கு 14 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கியது இத்தாலி நீதிமன்றம். இதனிடையே தாயாரை காவல்துறை தேடி வருகிறது.