உலகம்

இந்தியாவில் வைத்து அமைதிப் பேச்சுவார்த்தை.. மோடியால் உக்ரைன் போரை நிறுத்த முடியும் - ஜெலன்ஸ்கி

Published On 2024-10-29 03:57 GMT   |   Update On 2024-10-29 03:57 GMT
  • வட கொரியா தங்களது வீரர்கள் 10 ஆயிரம் பேர் வரை போருக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜெலின்ஸ்கி கூறியுள்ளார்
  • எந்த ஒரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.

உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் சேர்வது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரில் இரு நாடுகளும் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளன.

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாகத் தோல்வி அடைந்து வரும் நிலையில் போதாக்குறைக்கு ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் தங்களது வீரர்கள் 10 ஆயிரம் பேர் வரை போருக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரஷியா- உக்ரைன் தங்களது போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடியால் ரஷிய போரை நிறுத்த உதவ முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதங்களில் ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் சென்ற பிரதமர் மோடி போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தினார். சமீபத்தில் ரஷியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டுக்கும் மோடி சென்று வந்தார். இந்த யுகம் போருக்கானது அல்ல என்றும் எந்த ஒரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.

 

 

 

எனவே தற்போது பேசியுள்ள ஜெலன்ஸ்கி, " உலகின் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என பல்வேறு சிறப்புகளை இந்தியா பெற்றிருக்கிறது. சர்வதேச அரசியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் செல்வாக்குமிக்க தலைவராக மாறி உள்ளார். உக்ரைன் போரை நிறுத்த அவரால் உதவ முடியும். இதுதொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News