உலகம்

உக்ரைனில் ரஷியா சரமாரியாக ஏவுகணை தாக்குதல்- 6 பேர் பலி

Published On 2023-06-14 12:37 GMT   |   Update On 2023-06-14 12:37 GMT
  • கருங்கடலில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு கலிபர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • ஒடேசாவில் நடைபெற்ற தாக்குதல் குறித்து அந்த பகுதி நிர்வாகம் முகநூலில் பதிவிட்டுள்ளது.

ரஷியப் படைகள், தெற்கு உக்ரைனின் நகரமான ஒடேசா மீது இரவோடு இரவாக கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசி தாக்கி உள்ளது. இன்று அதிகாலை கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள வீடுகளை ஷெல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனுக்கு எதிரான 15-மாத கால போரில் ரஷியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருப்பதாக உக்ரைனின் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

"ஏழு வீடுகளின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர் என்றும் கிராமடோர்ஸ்க் மற்றும் கான்ஸ்டான்டினோவ்கா நகரங்களில் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின" என்றும் டொனெட்ஸ்க் பிராந்திய ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஒடேசாவில் நடைபெற்ற தாக்குதல் குறித்து அந்த பகுதி நிர்வாகம் முகநூலில் பதிவிட்டுள்ளது. ஒரு உணவுக்கிடங்கின் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டனர் என்றும் ஏழு பேர் காயமடைந்தனர் என்றும், வீடுகள், ஒரு கிடங்கு, கடைகள் மற்றும் நகர்ப்புற கடைகள் சேதமடைந்தன என்றும் தெரிவித்திருக்கிறது. மேலும், ஆறு பேர் - காவலர்கள் மற்றும் அருகாமை வீட்டில் வசிப்பவர்கள் - காயமடைந்தனர் என்றும் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களில், உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி ஈடுபட்டு வருவதாகவும், அந்த பதிவில் தெரிவித்துள்ளது.

ஒடேசா நகரம் மீது கருங்கடலில் இருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நான்கு கலிபர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று வான் பாதுகாப்புகளால் இடைமறிக்கப்பட்டன என்று பிராந்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News