உலகம் (World)

வேலி இல்லா மெடாவெர்ஸ் - புது ரக பாலியல் தாக்குதல்

Published On 2024-01-03 07:59 GMT   |   Update On 2024-01-03 08:03 GMT
  • "இம்மர்சிவ் கேம்ஸ்" விளையாட்டுக்களில் குழந்தைகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்
  • மெய்நிகர் தொழில்நுட்ப விளையாட்டுக்களில் எச்சரிக்கை தேவை என்றார் காவல் ஆணையர்

சமீப சில வருடங்களாக இணையதளத்தில், "விஆர்" (VR) எனப்படும் மெய்நிகர் உண்மை (Virtual Reality) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனர்கள் விளையாடும் பல விளையாட்டுக்கள் பிரபலமடைந்துள்ளன.

வீட்டிற்கு வெளியே செல்லாமல் குழுந்தைகளால் விளையாட முடியும் என்பதால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதற்கு தேவையான ஹெட்செட் போன்ற உபகரணங்களை வாங்கி தந்து ஊக்குவிக்கின்றனர்.

மெடாவெர்ஸ் (Metaverse) எனப்படும் வளர்ந்து வரும் இத்தொழில்நுட்பத்தில், தொலைதூரத்தில் உள்ள ஒருவருடனோ அல்லது பலருடனோ, அல்லது ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாகவோ, குழந்தைகளால் விளையாட முடிகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் 16 வயது சிறுமி ஒருவர் இதற்கான உபகரணங்களுடன் தனது வீட்டில் இருந்தபடியே "இம்மர்சிவ் கேம்ஸ்" (immersive games) எனப்படும் "மூழ்கடிக்கும் விளையாட்டு" வகைகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினார்.

மெடா (Meta) நிறுவனத்தின் (முன்னர் ஃபேஸ்புக்) "ஹொரைசான் வேர்ல்ட்ஸ்" (Horizon Worlds) எனப்படும் அந்த மெய்நிகர் விளையாட்டில் "அவதார்" (avatar) எனப்படும் அவரை போன்றே தோற்றமுடைய மெய்நிகர் வடிவத்துடன், பல இடங்களில் இருந்து பலர் தங்கள் அவதார் உருவங்களுடன் விளையாடி வந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பிற அவதார்கள் (அதனை இயக்குபவர்களால்) அச்சிறுமியின் அவதார் மீது பாலியல் தாக்குதல் நடத்தியது.

சிறுமி மீது நேரடியான பாலியல் தாக்குதல் நடக்கவில்லை என்றாலும் மெய்நிகரில் நடைபெற்ற "கூட்டு பாலியல் தாக்குதல்" அச்சிறுமிக்கு உணர்வுபூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, அச்சிறுமியின் குடும்பத்தினர், இங்கிலாந்து காவல்துறையிடம் இது குறித்து புகாரளித்தனர். காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இவ்விளையாட்டு தளம் குறித்து முன்னரே இது போன்ற புகார்கள் சில முறை எழுப்பபட்டும், சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி (James Cleverly), "இது போன்ற தாக்குதல்களை குறைத்து மதிப்பிடாமல் தீவிரமாக நாம் பார்க்க வேண்டியது அவசியம்" என தெரிவித்துள்ளார்.

"வேலி இல்லாத மெய்நிகர் விளையாட்டுகளில் தாக்குதலை நடத்த இரை தேடும் மிருகங்கள் போல் பல விஷமிகள் அதிகம் வர வாய்ப்புள்ளதால், இவற்றை தடுக்கும் விதமாக சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என இங்கிலாந்து காவல் துறை தலைவர் "இயான் க்ரிஷ்லி" (Ian Critchley) தெரிவித்துள்ளார்.

வெளியில் விளையாட சென்றால் மட்டும்தான் ஆபத்து என எண்ணி வீட்டிற்கு உள்ளே குழந்தைகள், நவீன தொழில்நுட்பங்களை பயனபடுத்தும் போது அவர்களின் விளையாட்டுக்களை பெற்றோர் கண்காணிக்காமல் இருப்பது தவறு என இணையதள வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags:    

Similar News