உலகம்

இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை- நிதி மந்திரி தகவல்

Published On 2023-07-23 00:51 GMT   |   Update On 2023-07-23 00:51 GMT
  • இலங்கை இந்தியா இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணம் குறித்து இலங்கை வெளியுறவு மந்திரி விரிவாக பேசினார்.

இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளதார நெருக்கடியின்போது இந்தியா பல்வேறு வகைகளில் அந்த நாட்டுக்கு உதவியது. நிதி உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதோடு, இலங்கைக்கு சர்வதேச நிதியம் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் இந்தியா செய்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு இலங்கை அதிபராக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக கடந்த 20-ந் தேதி இந்தியா வந்தார்.

இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அலி சப்ரி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணம் குறித்து விரிவாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இரு நாடுகளுக்கும் இடையே துறைமுக இணைப்பின் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அடுத்தகட்டத்தை அடைய, எங்களுக்கு முதலீடுகள் தேவை. இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வழிகளை நாங்கள் விவாதித்தோம். இரு அரசாங்கங்களுக்கு இடையில் மட்டுமன்றி தனியார் துறைகளுக்கு இடையிலான உறவும் வலியுறுத்தப்பட்டன

தென்னிந்திய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியில் இலங்கைக்கு நன்மையளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உதவும் வகையில் இந்திய பல்கலைக்கழகத்தை இணைத்துக்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. டாலர், யூரோ மற்றும் யென் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது போல் இந்திய ரூபாயை பொது பணமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.

இந்திய ரூபாயின் நேரடி பயன்பாட்டை அனுமதிப்பது, இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு பல நாணய மாற்றங்களின் தேவையைத் தடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News