உலகம் (World)

ஈழ இறுதிப்போரின்போது இனப்படுகொலை என்ற கனடா பிரதமரின் குற்றச்சாட்டை நிராகரித்த இலங்கை

Published On 2024-05-21 16:25 GMT   |   Update On 2024-05-21 16:25 GMT
  • மே 18-ந்தேதி தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக கடைபிடிக்க அங்கீகாரம்.
  • இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வலுவான நாடாக கனடா உள்ளது.

விடுதலைப்புலிகள்- இலங்கை ராணுவத்திற்கு இடையிலான சண்டை 2009-ம் ஆணடு உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இளைஞர்கள் மாயமானர்கள்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. ஆனால் இலங்கை அரசு குற்றச்சாட்டை மறுத்து வருகின்றன.

இந்த நிலையில் மே 18-ந்தேதி தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக கடைபிடிக்க கனடா பாராளுமன்றத்தில் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில் "மோதலின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்பேற்றல், இலங்கையில் அனைவரும் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு நாங்கள் எப்போதும் வாதிடுவோம். 2023-ல், ஆயுதப்போரின் போது நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில், நான்கு முன்னாள் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக நாங்கள் பொருளாதாரத் தடைகளை விதித்தோம்.

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வலுவான நாடாக கனடா உள்ளது. கனடா மதம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவ சுதந்திரத்தை மதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தும்" என்றார்.

இதற்கு இலங்கை அரசு, வாக்கு வங்கி அரசியலுக்காக விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது இனப்படுகொலை நடைபெற்றதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டுகிறார் எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

இனப்படுகொலை என்ற மூர்க்கத்தனமான குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் முந்தைய அனைத்து தகவல் தொடர்புகளிலும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், ஐ.நா சாசனத்தின் கொள்கைகளுக்கு மாறாக, தனிநாடு வலியுறுத்தி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஆயுதமேந்திய பிரிவினைவாத பயங்கரவாத மோதலின் முடிவுடன் தொடர்புடையது. விடுதலைப்புலிகள் இயக்கம் கனடா உட்பட உலகளவில் 33 நாடுகளில் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்டதாகும்.

இவ்வாறு இலங்கை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News