உலகம்

சீனாவுக்கு பதிலடி... முதல் போர்ட்டபிள் ஆளில்லா விமானத்தை அறிமுகம் செய்தது தைவான்

Published On 2023-03-14 17:05 GMT   |   Update On 2023-03-14 17:05 GMT
  • உக்ரைன் வீரர்கள் பயன்படுத்தி வரும் அமெரிக்க மாடலைப் போன்று இந்த ஆளில்லா விமானம் உள்ளது.
  • தைவான் தனது அடுத்த தலைமுறை தற்கொலை தாக்குதல் ட்ரோன்களையும் உருவாக்கி வருகிறது

தைவானை மீண்டும் தன்வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் சீனா, ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது. அவ்வப்போது போர் விமானங்களை அனுப்பி தைவானை பதற்றமடைய வைக்கிறது. தைவானைச் சுற்றி போர் ஒத்திகையை மேற்கொள்கிறது. சீனா போர் தொடுத்தால் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தைவான் கூறி உள்ளது.

சீனாவின் ராணுவ அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், தைவான் முதல் போர்ட்டபிள் ட்ரோனை (ஆளில்லா விமானம்) இன்று அறிமுகம் செய்து சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. ரஷியாவுக்கு எதிரான சண்டையில் உக்ரைன் வீரர்கள் பயன்படுத்தி வரும் அமெரிக்க மாடலைப் போன்று (ஸ்விட்ச்பிளேடு 300) இந்த ஆளில்லா விமானம் உள்ளது. இந்த ஆளில்லா விமானம் மூலம் எதிரிகளின் இலக்கை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடியும்.

தைவானில் தயாரிக்கப்பட்ட, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த ட்ரோன், ஒரு பையில் எடுத்துச் செல்லும் அளவுக்கு சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 நிமிடங்கள் வரை வானத்தில் பறக்க முடியும் என தைவான் ராணுவத்தின் நேஷனல் சுங்-ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் கூறியிருக்கிறது.

தங்கள் நாட்டின் கடற்கரைக்கு அருகில் உள்ள இலக்குகளைத் தாக்குவதில் இது பயனுள்ளதாக இருக்கும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன தலைவர் சி லி பின் கூறினார். மேலும், தைவான் தனது அடுத்த தலைமுறை தற்கொலை தாக்குதல் ட்ரோன்களையும் உருவாக்கி வருவதாகவும், நீண்ட தூர தாக்குதல்களில் பயன்படுத்தக்கூடிய பெரிய ட்ரோன்களும் இதில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News