வடகொரியா மேலும் 3 ஏவுகணைகளை வீசியது: தென்கொரியா- ஜப்பானில் அவசர கால எச்சரிக்கை
- வடகொரியா வீசிய ஒரு ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது.
- தென்கொரியாவின் உல்லியுங் தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், பதுங்கு குழிகளில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வடகொரியா இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனை அடிக்கடி நடத்தி வருகிறது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.
இதற்கிடையே தென் கொரியா- அமெரிக்கா இணைந்து போர் பயிற்சி செய்வதற்கு மிரட்டல்விடும் வகையில் நேற்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை நடத்தியது. தென் கொரியா எல்லையை நோக்கி வீசப்பட்ட ஏவு கணைகளில் ஒன்று தென் கொரியாவின் சோக்கோ நகர் அருகே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தென் கொரியாவின் உல்லியுங் தீவில் வான்வழி தாக்குதல் பற்றிய அபாய எச்சரிக்கை எழுப்பப்பட்டது. இதற்கிடையே வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியாவும் ஏவுகணை சோதனை நடத்தியது.
வடகொரியா நோக்கி 3 ஏவுகணைகள் வீசப்பட்டன. கொரியா தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவும் சூழலில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.
இதுதொடர்பாக தென் கொரிய ராணுவம் கூறும்போது, 'வடகொரியா இன்று நீண்ட தூர மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது' என்று தெரிவித்தது.
இந்தநிலையில் இன்று வடகொரியா வீசிய ஒரு ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது. காலை 7.48 மணி அளவில் ஜப்பான் மீது ஏவுகணை பறந்ததாக ஜப்பான் அலுவலகம் தெரிவித்தது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஹமாடா கூறும்போது, 'ஜப்பான் தீவு கூட்டத்தின் மேலே ஏவுகணை சென்றது கண்டறியப்பட்டதால் உடனே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தகவலை சரிபார்த்த பிறகு ஏவுகணை ஜப்பானிய தீவுக்கூட்டத்தை கடக்கவில்லை. ஆனால் ஜப்பான் கடலில் விழுந்ததை உறுதி படுத்தி உள்ளோம்' என்றார்.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை வீசி வருவதால் தென்கொரியா, ஜப்பானில் மக்களுக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் உல்லியுங் தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், பதுங்கு குழிகளில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஜப்பானின் வடக்கு பகுதியில் 3 பிராந்தியங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்று வட கொரியா ஏவுகணையை வீசிய பிறகு ஜப்பான் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளின் கீழ் பகுதிக்கு சென்று பதுங்கிக் கொண்டனர்.