உலகம்

வடகொரியா மீண்டும் 3 ஏவுகணை சோதனை- தென்கொரியா வான் வெளியில் டிரோன் விமானங்களை பறக்க விட்டதால் பதட்டம்

Published On 2022-12-31 05:59 GMT   |   Update On 2022-12-31 06:54 GMT
  • வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென் கொரியா அதிபர் யூன்-சுக் யோல் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.
  • தென்கொரியா போர் விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்கள் அந்த டிரோன் விமானங்களை சுட்டு வீழ்த்தும் முயற்சியில் இறங்கியது.

உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த ஆண்டு மட்டும் இதுவரை 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி உள்ளது.

கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவியும் சோதனை நடத்தியது. இதுவரை மொத்தம் 38 முறை இந்த சோதனை நடந்து உள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று வடகொரியா 3 குறுகிய அளவிலான பாலிடிக்ஸ் ஏவுகணை ஏவி சோதணை மேற்கொண்டதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. தெற்கு பினாங் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரையை நோக்கி இந்த ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து சென்றது .

இதேபோல் தென்கொரியா வான்வெளி பரப்பில் 5 டிரோன் விமானங்களை வடகொரியா பறக்கவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக தென்கொரியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் ஒரு டிரோன் விமானம் தெற்கு சியோல் பகுதியில் பறந்தது. இதையடுத்து தென்கொரியா போர் விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்கள் அந்த டிரோன் விமானங்களை சுட்டு வீழ்த்தும் முயற்சியில் இறங்கியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது டிரோன் விமானங்களை அனுப்பி வடகொரியா அச்சுறுத்தி இருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் உருவாகி உள்ளது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென் கொரியா அதிபர் யூன்-சுக் யோல் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வடகொரியாவின் ஏவுகணை சோதனையை தொடர்ந்து சகிக்க முடியாது. இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்கள் எப்போதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வடகொரியா உணர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News