உலகம்

ஏழை சிறுவனின் பிறந்தநாளை கொண்டாடிய பள்ளி மாணவர்கள்

Published On 2023-11-04 09:40 GMT   |   Update On 2023-11-04 09:41 GMT
  • ஒரு ஏழை சிறுவனின் பிறந்த நாளை சக மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பயனர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது.
  • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுவனின் ஆசிரியர் மற்றும் சக மாணவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் பிறந்தநாளன்று புதிய ஆடை அணிந்து பள்ளிக்கு சென்று சக மாணவ- மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடுவது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆனால் இவையெல்லாம் ஏழை மாணவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாததாகவே உள்ளது.

இந்நிலையில் ஒரு ஏழை சிறுவனின் பிறந்த நாளை சக மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பயனர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது. கொலம்பியாவின் எபிஜிகோ பகுதியை சேர்ந்த சிறுவன் ஏஞ்சல் டேவிட். 8 வயதான இந்த ஏழை சிறுவன் இதுவரை பிறந்தநாளை கொண்டாடியது கிடையாது.

இந்நிலையில் அவனது 8-வது பிறந்தநாளை அறிந்த பள்ளி ஆசிரியர் காசாஸ் சிமெனா அந்த சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வகுப்பறையில் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டார்.

அதன்படி சிறுவன் டேவிட் வகுப்பறைக்கு வந்த போது சக மாணவர்கள் அவரை கைதட்டி, பிறந்தநாள் வாழ்த்து, பாட்டு பாடி வரவேற்றுள்ளனர். மேலும் வகுப்பறையில் பலூன்கள் கட்டி, அலங்காரம் செய்து சிறுவனின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்ற இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுவனின் ஆசிரியர் மற்றும் சக மாணவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News