"பயங்கரவாதத்தை ஒரு போதும் மன்னிக்க முடியாது": அமெரிக்க துணை அதிபர்
- திடீரென ஹமாஸ் நடத்திய இந்த பயங்கரவாத தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது
- எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றார் ஹாரிஸ்
கடந்த சனிக்கிழமையன்று பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது ஒரு எதிர்பாராத தாக்குதலை நடத்தியது.
வான்வழியாக 5000 ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசியும், தரை வழியாகவும், நீர் வழியாகவும் தாக்குதல் நடத்தி அந்நாட்டிற்குள்ளே ஹமாஸ் ஊடுருவியது. இத்தாக்குதலில் பல இஸ்ரேலியர்கள் பலியானார்கள்; பல இஸ்ரேலியர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவர் மீதும் நடந்த இந்த தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி, பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது.
இப்போர் 6-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இந்நிலையில், அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இது குறித்து பேசிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்ததாவது:
எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் பயங்கரவாத செயல்களை கண்டிக்க வேண்டும். இது போன்ற பயங்கரவாத செயல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன். இஸ்ரேலை ஆதரித்துள்ள அமெரிக்காவின் நிலைப்பாடு மிகவும் உறுதியானது. தன்னை காத்து கொள்ள இஸ்ரேலுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் உறுதியுடன் உள்ளோம். அங்குள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பே இப்போது மிகவும் முக்கியம். நானும் அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொடர்பில் உள்ளோம். இஸ்ரேலிய மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக உள்ளோம் என்பதை தெரிவித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹமாஸ் தாக்குதலில் இருபதிற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.