ட்ரிங்.. ட்ரிங்.. ரஷிய அதிபர் புதினுக்கு போன் செய்து பேசிய டிரம்ப்.. உக்ரைன் போருக்கு முடிவு?
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்புகொண்டு டிரம்ப் பேசினார்
- நேர்மறையான சூழலை ஏற்படுத்தும் என்று ரஷியா அதிபர் மாளிகை [கிரம்லின்] செய்தித்தொடர்பாளர் டிமிட்ட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்
உலகமே எதிர்நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் நின்ற முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த 2016 முதல் 2020 வரை டிரம்ப் அதிபராக இருந்தபோது சர்வதேச அரசியல் சூழலில் இணக்கத்தைப் பேணி வந்தார்.
அமெரிக்க அதிபர் ஒருவர் முதல் முறையாக வட கொரியாவுக்கு சென்று அந்நாட்டு அதிபரை சந்திப்பதெல்லாம் டிரம்ப்பின் ஆட்சி காலத்திலேயே நடந்தது. இந்நிலையில் மீண்டும் அதிபராக உள்ள டிரம்ப் ஜனவரியில் பதவி ஏற்க உள்ளார்.
ஆனால் அதுவரை காத்திருக்காமல் தற்போதே சர்வதேச சூழலை கையால தொடங்கியுள்ளார் டிரம்ப். இஸ்ரேல்- பாலஸ்தீன போர் மற்றும் உக்ரைன் - ரஷியா போர் ஆகியவை டிரம்ப் முன்னாள் இருக்கும் மிகப்பெரிய சவால்கள் ஆகும்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்புகொண்டு டிரம்ப் சமீபித்தில் பேசினார். இந்நிலையில் தற்போது ரஷிய அதிபர் புதின் உடனும் தொலைப்பேசி வாயிலாக டிரம்ப் உரையாடி உள்ளார்.
புளோரிடாவில் உள்ள தனது மார்- இ- லாகோ எஸ்டேட்டில் ஓய்வெடுத்து வரும் டிரம்ப் அங்கு வைத்து புதினுக்கு போன் செய்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உரையாடலில் உக்ரைன் போரை மேற்கொண்டு தீவிரப்படுத்த வேண்டாம் என்று டிரம்ப் புதினை வலியுறுத்தியதாக தெரிகிறது.
போரை நிறுத்துவதற்கான தீர்வு குறித்தும் இந்த போன் காலில் பேசப்பட்டுள்ளதாக வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பாவில் எந்நேரமும் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை நிறுவ முடியும் என்று டிரம்ப் புதினிடம் கூறியதாக தெரிகிறது. ஐரோப்பா - அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ நாடுகளில் சேர முயன்றதால் உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 இல் போர் தொடுத்தது.
அதுமுதல் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் மற்றும் ராணுவ பலத்தை வழங்கி வருகிறது. முன்னதாக டிரம்ப் அதிபரானதற்கு வாழ்த்து தெரிவித்த புதின், அமெரிக்கா விரும்பினால் தொடர்பை தொடருவோம் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் டிரம்ப் அதிபவராது நேர்மறையான சூழலை ஏற்படுத்தும் என்று ரஷியா அதிபர் மாளிகை கிரம்லின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ட்ரி பெஸ்கோவ் நேற்றைய தினம்[ஞாயிற்றுகிழமை] தெரிவித்தார்.