மேலவையை தட்டித் தூக்கிய டிரம்ப்.. வெற்றிக்கு முன்பே செனட்டில் மெஜாரிட்டி பெற்ற குடியரசு கட்சி
- அமெரிக்காவில் மொத்தம் 100 செனட் இடங்கள் உள்ளன
- தேர்தலில் வெல்லும் முன்பே செனட் சபையில் டிரம்ப் ஆதிக்கத்தை உறுதி செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 214 எலக்டோரல் வாக்குகளையும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் 247 எலக்டோரல் வாக்குகளையும் பெற்றுள்ளனர். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். 50 மாகாணங்களில் மொத்தம் 51.2% வாக்குகளுடன் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். 47.4% வாக்குகளுடன் கமலா பின்தங்கியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் [மேலவை] டிரம்ப்பின் குடியரசுக் கட்சி ஆதிக்கத்தை நிறுவியுள்ளது. செனட் [மேலவை] மற்றும் பிரதிநிதிகள் சபை [ஹவுஸ்] ஆகிய இரண்டிலும் அதிக இடங்களைக் குடியரசுக் கட்சி பெற்றுள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 100 செனட் இடங்கள் உள்ளன. இதில் 51 இடங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி வென்றுள்ளது. கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி 42 இடங்களில் உள்ளது.
இதன்மூலம் செனட் சபையில் பெரும்பான்மை பெற்ற டிரம்ப்பின் குடியரசு கட்சி, நீதிபதிகளை நியமித்தல் உள்ளிட்ட மேலவை செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தும். அதாவது, டிரம்ப் வெற்றி பெற்றால் எந்த தடங்கலும் இன்றி மேலவையில் உள்ள பெரும்பான்மையை வைத்து சுதந்திரமாக முடிவுகளை செயல்படுத்த முடியும். அதே நேரம் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றாலும், மேலவையில் டிரம்ப் கட்சியின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுவது கடினம். எனவே தேர்தலில் வெல்லும் முன்பே செனட் சபையில் டிரம்ப் தனது ஆதிக்கத்தை உறுதி செய்துள்ளார்.
அதேபோல் 50 மாகாணங்கள் கொண்ட அமெரிக்காவில் 435 பிரதிநிதிகள் சபை [ஹவுஸ்] இடங்கள் உள்ளன. இதில் தற்போது 184 இடங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியும், 155 இடங்களில் கமலாவின் ஜனநாயக கட்சியும் வென்றுள்ளது. இதில் 218 இடங்களைக் கைப்பற்றும் கட்சியே பிரதிநிதிகள் சபையில் [ஹவுஸ்] பெரும்பான்மையைப் பெறும்