உலகம்

ஈராக்கில் உள்ள குர்தீஷ் நிலைகள் மீது துருக்கி போர் விமானங்கள் தாக்குதல்

Published On 2024-03-20 02:45 GMT   |   Update On 2024-03-20 02:45 GMT
  • குர்தீஷ் போராளிகள் குழு துருக்கி ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழப்பு.
  • பதிலடியாக துருக்கு ராணுவம் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

துருக்கி அரசுக்கு எதிராக குர்தீஷ் போராளி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பாக துருக்கி அரசு அறிவித்துள்ளது. துருக்கி ஈராக் எல்லையில், ஈராக் பகுதியில் குர்தீஷ் போராளிகள் குழு செயல்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் அரை-தன்னாட்சி பெற்ற சுதந்திர அமைப்பாக செயல்பட்டு வருகிறது. குர்தீஷ் குழு ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் ஈராக் அரசால் அவர்களை ஒன்னும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குர்தீஷ் போராளிகள் குழு திடீரென துருக்கி ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் துருக்கியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பலியானார். நான்கு பேர் காயம் அடைந்தனர். இதனால் கோபம் அடைந்த துருக்கி ராணுவம், ஈராக்கில் செயல்பட்டு வரும் குர்தீஷ் போராளிகள் குழுவின் நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

மெட்டினா, ஜாப், ஹகுர்க், காரா மற்றும் குவாண்டில் பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குர்தீஷ் போராளிகள் குழுவின் குகைகள், முகாம்கள், பதுங்கு குழிகள் ஆகியவற்றை குறிவைத்ததாகவும் 27 நிலைகள் அழிக்கப்பட்டதாகவும் துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் குர்தீஷ் போராளி குழு இது தொடர்பான உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

1980-ல் இருந்து குர்தீஷ் போராளி குழு துருக்கி அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

கடந்த வாரம் துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி ஹகான் பிடன், ஈராக் நாட்டின் மந்திரியுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது குர்தீஷ் போராளி குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்க எதிரான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

பின்னர் இரு நாடுகள் சார்பில், குர்தீஷ் போராளிகள் குழு இருநாட்டு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அறிவித்தன. மேலும், ஈரானில் செயல்படுவது அந்நாட்டின் அரசமைப்பு மீறுவதாகும் எனவும் தெரிவித்தன.

Tags:    

Similar News