உலகம்

இங்கிலாந்தில் வரும் ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல்- பிரதமர் ரிஷி சுனக்

Published On 2024-05-23 05:19 GMT   |   Update On 2024-05-23 05:19 GMT
  • இங்கிலாந்து தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் தருணம் இது.
  • தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம்.

இங்கிலாந்தில் வரும் ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அவர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பொதுத் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் ரிஷி சுனக் கூறும்போது, "பாராளுமன்றத்தை கலைக்க இங்கிலாந்து மன்னர் சார்லசிடம் கோரினேன். இந்த கோரிக்கையை மன்னர் ஏற்றுக்கொண்டார். ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தலை நடத்துவோம். இங்கிலாந்து தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் தருணம் இது" என்றார்.

இங்கிலாந்தில் 2025-ம் ஆண்டு ஜனவரிக்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக் 2024-ம் ஆண்டு பிற்பகுதியில் தேர்தல் நடைபெறும் என்று கூறிவந்தார். இதற்கிடையே தேர்தல் தேதி வெளியாகி உள்ளது. 

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் பிரதமராக பொறுப்பேற்றார். ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக சந்திக்கும் தேர்தல் இதுவாகும். 2016-ம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் நடைபெற உள்ள 3-வது பொதுத் தேர்தலாகும்.

இதனிடையே எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருப்பதாக கூறியிருந்தது.

இது தொடர்பாக தொழிலாளர் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, "தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம். எங்களிடம் ஒரு முழுமையான ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரக்குழு தயாராக உள்ளது. நாடு தற்போது பொதுத் தேர்தல் வேண்டும் என்று விரும்புகிறது என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றார்.

Tags:    

Similar News