மேலதிகாரிகளை மனசார திட்டித் தீர்க்கணுமா.. வந்தாச்சு வன்மத்தை கக்கும் புதிய சேவை - இது நல்லா இருக்கே
- ஸ்டான்ட் அப் காமெடியன் காலிமார் வைட் இந்த விசித்திர நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
- இந்த வசைபாடும் ஏஜென்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்குச் சிறப்புத் தகுதிகள் இருக்க வேண்டும்
நிறுவனத்தின் பணியிடத்தில் மேலதிகாரிகளின் நியமற்ற செயல்களால் ஊழியர்கள் பாதிக்கப்படுவது வழக்கம். மேலதிகாரிகளைச் சட்டையைப் பிடித்து திட்ட வேண்டும் என்று பலருக்கும் தோன்றுவது இயல்பே.
ஆனால் அதன் பின்விளைவுகள், வேலை இழப்பு என பல பிரச்சனைகள் ஊழியர்களின் கையை கட்டிப்போட்டு விடுகின்றன. ஆனால் ஆள் வைத்து அடிப்பது போல் தற்போது ஆள் வைத்து திட்டும் சேவை அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது.
வொர்க் பிரஷர், டிப்ரஷன், சம்பள உயர்வின்மயால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி என மேலதிகாரிகள் செயல்களால் பாதிக்கப்படும் ஊழியர்கள் இந்த விசித்திர சேவையை பயன்படுத்தி தங்கள் ஆள் மன ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். அமெரிக்காவை சேவை ஸ்டான்ட் அப் காமெடியன் காலிமார் வைட் இந்த விசித்திர நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இவருக்கு இன்ஸ்ட்டாகிராமில் 280,000 பாலோயர்கள் உள்ளனர்.
அலுவலக புகார்கள் மற்றும் பிரச்சனைகள் ஏஜென்சி [OCDA (Office Complaints and Disputes Agency)] என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அவர் இந்த சேவையை வழங்கி வருகிறார்.
ஊழியர்களின் பிரச்சனைகளை சரிசெய்து அவர்களின் சுயமரியாதை மீட்டெடுத்து ஆரோக்கியமான பணி சூழலை உருவாக்குவதே தங்கள் நிறுவனத்தின் நோக்கம் இதன் இணையதள பக்கம் தெரிவிக்கிறது. இந்த இனையதளத்தில் எந்த வகையான நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களும் தங்கள் பிரச்சனையைப் பதிவு செய்யலாம். அதனை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியரின் அலுவலகத்துக்கு இந்த OCDA ஏஜெண்டுகள் செல்வார்கள்.
அங்கு மேலதிகாரியையோ, மேனேஜரையோ, முதலாளியையோ சந்தித்து புகார் கொடுத்த ஊழியர்களின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஸ்க்ரிப்ட்டின் படி திட்டுவதோ, அல்லது பிரச்சனைகளை எடுத்துரைக்கவோ செய்வார்கள். அதற்கு அந்த முதலாளி என்ன எதிர்ப்பு சொன்னாலும், இந்த ஏஜெண்டுகள் தாங்கள் கூறவந்ததை அழுத்தம் திருத்தமாக அவருக்கு உரைக்கும் வகையில் கூறிவிட்டுதான் அங்கிருந்து நகர்வார்கள். புகார் அளித்த ஊழியரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.
இந்த ஏஜெண்டுகள் தொழில்முறை வசைபாடுபவர்கள் [scolder] என்று அழைக்கப்டுகின்றனர். ஒரு வேலை புகார் அளித்த ஊழியரின் நிறுவனம் தங்கள் சேவை எல்லைக்கு அப்பால் வேரோரு நகரத்தில் இருந்தால் போன் மூலமாக இந்த ஏஜெண்டுகள் நிறுவன மேலதிகாரியை தொடர்புகொண்டு பேசுவார்கள்.
இந்த OCDA நிறுவனம் 80,000 சப்ஸ்கிரைபர்களுடன் யூடியூப் சேனலும் வைத்துள்ளது. அதில் தங்கள் கிளைன்ட்டுகள் சார்பில் ஏஜெண்டுகள் மேலதிகாரிகளிடம் பேசும் வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. இந்த வீடியோவில் ஒன்று சமீபத்தில் வைரலான நிலையில் இந்த நிறுவனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் இதன் சேவைகள் வழங்கபடுமா அல்லது கிளைகள் தொடங்கப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதற்கிடையே இந்த வசைபாடும் ஏஜெண்டுகளுக்கான ஆளெடுப்பும் நடந்து வருகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்குச் சிறப்புத் தகுதிகள் இருக்க வேண்டுமாம், அதாவது, தங்கள் குழந்தைகளை அதிகம் திட்டிக்கொண்டிருக்கும் பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம் அதிலும், தனியாளாகக் குழந்தையை வளர்க்கும் சிங்கிள் பேரெண்ட் ஆக இருப்பது அதி உத்தமம்.