உலகம்

ஏலத்திற்கு வந்த ஆங் சான் சூகி வீடு: 142 மில்லியன் டாலருக்கு கேட்க ஆளில்லை

Published On 2024-08-15 13:17 GMT   |   Update On 2024-08-15 13:17 GMT
  • ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடியதால் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • 2020-ல் அதிகாரத்தை கைப்பற்றிய போதிலும் ஆட்சி கவிழ்க்கப்பட்டு 27 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடியவர் ஆங் சான் சூகி. இவர் பல வருடங்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2010-ம் ஆண்டு வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின் அரசியல் தீவிரமாக ஈடுபட்டு 2020 தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் 2021 பிப்ரவரியில் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியை பிடித்தது. அப்போது அவருக்கு 27 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் தற்போது வீட்டுக்காவில் உள்ளார்.

இந்த நிலையில் யங்கூன் ஏரிக்கரையில் 1.9 ஏக்கர் நிலத்தில் இவரின் தாயார் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு அவருடைய மூத்த சசோதரர் உரிமை கொண்டாடினார். இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது நீதிமன்றம் வீட்டை ஏலத்தில் விட உத்தரவிட்டது. அதற்கான அடிப்படை விலை 142 மில்லியன் அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டது.

இன்று வீடு ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் ஏலம் கேட்கவில்லை. இதனால் வீடு ஏலம் விடப்படவில்லை. இவ்வாறு நடப்பது இது 2-வது முறையாகும்.

மியான்மர் சுதந்திர ஹீரோவா கருதப்படும் ஜெனரல் ஆங் சான் இவரது தந்தை. இவர் 1947-ல் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆங் சான் மனைவி (சூகி தாயார்) கின் கி-க்கு இந்த வீடு அரசால் வழங்கப்பட்டது. இது பிரிட்டிஷ் கால ஸ்டைலில் இரண்டு மாடி வீடாகும்.

இந்த வீட்டில் ஆங் சான் சூகி 15 வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிங்டன், ஐநா பொதுச் செயலாளர் பான் கி-மூன் ஆகியோர் இந்த வீட்டிற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங் சான் சூகி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார். தனது வாழ்க்கையின் பெரும்பாலான வருடங்களை சிறையில் கழித்துள்ளார்.

Tags:    

Similar News