செய்திகள் (Tamil News)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி

Published On 2019-06-01 18:47 GMT   |   Update On 2019-06-01 19:25 GMT
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
பிரிஸ்டல்:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 4-வது ஆட்டம் நடைப்பெற்றது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் மற்றும் முகமது ஷாசத் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். பின் களமிறங்கிய ஹஸ்மத்துல்லா ‌ஷகிடி 18(34) ரன்களில் வெளியேற, நிதானமாக ஆடிய ரமத் ஷா 43(60) ரன்களில் அவுட்டானார். பின் முகமது நபி 7(22) ரன்னில் ரன் அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா ஜட்ரன் மற்றும் குல்படின் நைப் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

இதில் ஓரளவு ரன் சேர்த்த குல்படின் நைப் 31(33) ரன்களில் அவுட்டாக, தனது அரைசதத்தினை பதிவு செய்த நஜிபுல்லா ஜட்ரன் அதே ஓவரில் 51(49) ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். தவ்லத் ஜட்ரன் 4(6) ரன்னில் அவுட்டாக, சிறிது அதிரடியாக ஆடிய ரஷித் கான் 27(11) ரன்களிலும், முஜீப் ரகுமான் 13(9) ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில் 38.2 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜம்பா மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 2 விக்கெட்களும், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.



பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் சார்பில், கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான துவக்கத்தை தந்த இந்த ஜோடியில், தனது அரை சதத்தினை பூர்த்தி செய்திருந்த ஆரோன் பிஞ்ச் 66(49) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்ததாக களமிறங்கிய உஸ்மான் கவாஜா 15(20) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர், ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். வெற்றிபெற 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்டிவன் ஸ்மித் 18(27) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் டேவிட் வார்னர் 89(114) ரன்களும், மேக்ஸ்வெல் 4(1) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஆஸ்திரேலியா அணி 34.5 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக குல்படின் நைப், ரஷித் கான், முஜிப்-உர்-ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

Similar News