செய்திகள் (Tamil News)

மோசமான பீல்டிங்கால் தோற்றோம்- இங்கிலாந்து கேப்டன் மார்கன் கருத்து

Published On 2019-06-04 10:29 GMT   |   Update On 2019-06-04 11:34 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மோசமான பீல்டிங்கினால் தான் பாதிப்பு ஏற்பட்டது என்று இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் தெரிவித்துள்ளார்.
நாட்டிங்காம்:

உலககோப்பை போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றியை பெற்றது.

நாட்டிங்காமில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன் குவித்தது.

முகமது ஹபீஸ் 62 பந்தில் 84 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), பாபர் ஆசம் 63 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் சர்பிராஸ் அகமது 44 பந்தில் 55 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். மொய்ன்அலி, கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டும், மார்க்வுட் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 334 ரன் எடுத்தது. இதனால் அந்த அணி 14 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

ஜோரூட், பட்லர் ஆகியோர் சதம் பலன் இல்லாமல் போனது, ஜோரூட் 104 பந்தில் 107 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்), பட்லர் 76 பந்தில் 103 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். வகாப் ரியாஸ் 3 விக்கெட்டும், முகமது அமீர், சதாப்கான் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

48-வது ஓவரில் மொய்ன்அலி, வோக்ஸ் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது அந்த அணியின் வாய்ப்பை பாதித்தது.

இங்கிலாந்து அணி தொடர்ந்து பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. ஆனால் உலககோப்பையில் தோற்றது அதிர்ச்சியானதே. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் மார்கன் கூறியதாவது:-

இது எங்களுக்கு மோசமான நாள். காரணம் பீல்டிங் சிறப்பாக இல்லை. மோசமான பீல்டிங்கினால் தான் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பீல்டிங்கால் 15 முதல் 20 ரன்களை இழந்தோம். இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசிடம் மோசமாக தோற்று இருந்தது. வெற்றி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-

வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணி 3-வது ஆட்டத்தில் இலங்கையை 7-ந்தேதி சந்திக்கிறது. இங்கிலாந்து அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை 8-ந்தேதி எதிர்கொள்கிறது.

Similar News