செய்திகள் (Tamil News)

நியூசிலாந்தை சந்திக்கிறது- வங்காளதேசத்தின் அதிரடி தொடருமா?

Published On 2019-06-04 11:21 GMT   |   Update On 2019-06-04 11:32 GMT
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 9-வது ‘லீக்’ ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.
லண்டன்:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 9-வது ‘லீக்’ ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை (5-ந்தேதி) மாலை 6 மணிக்கு நடக்கிறது.

இரு அணிகளுமே முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தன. நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து இருந்தது. வங்காளதேச அணி 21 ரன்னில் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது நியூசிலாந்தா? வங்காள தேசமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிராக அபாரமாக விளையாடியது. தனது சிறப்பான பந்து வீச்சு மூலம் 29.2 ஓவர்களில் 136 ரன்னில் சுருட்டி இருந்தது.

மேலும் 137 ரன் இலக்கை விக்கெட் இழப்பின்றி எடுத்து முத்திரை பதித்தது.

அந்த அணியில் குப்தில், காலின் முன்ரோ, டெய்லர், கேப்டன் வில்லியம்சன், போல்ட், ஹென்றி, பெர்குசன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் நியூசிலாந்து அணி வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது போல நியூசிலாந்தையும் அதிர்ச்சிகரமாக வீழ்த்தும் வேட்கையில் வங்காளதேசம் இருக்கிறது. அந்த அணி வீரர்களின் அதிரடி நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்த அணி 330 ரன் குவித்தது சிறப்பானது. பேட்டிங்கில் முஷ்பிகுர் ரகீம், முன்னாள் கேப்டன் சகீப்-அல்-ஹசன், மகமதுல்லா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முஷ்டாபிசுர், ரகுமான், சைபுதீன், சகீப்-அல்-ஹசன் ஆகியோர் முத்திரை பதிக்க கூடியவர்கள்.

இரு அணிகளுமே 2-வது வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

Similar News