செய்திகள் (Tamil News)

பிராத்வைட் அதிரடி 2016 இறுதிப் போட்டியை ஞாபகப்படுத்தியது: பென் ஸ்டோக்ஸ்

Published On 2019-06-24 10:18 GMT   |   Update On 2019-06-24 10:18 GMT
நியூசிலாந்துக்கு எதிராக அதிரடியாக விளையாடி 101 ரன்கள் குவித்து அணியை வெற்றியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றதால் பிராத்வைட்டை பென் ஸ்டோக்ஸ் புகழ்ந்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் 164 ரன்கள் அடிப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து.

கார்லோஸ் பிராத்வைட் அதிரடியாக விளையாடி 82 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 101 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி மூன்று ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை மேட் ஹென்ரி வீசினார். இந்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் விளாசிய அவர், 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

இந்த ஓவரில் 25 ரன்கள் குவித்ததால் கடைசி இரண்டு ஓவரில் 8 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் நீசம் வீசிய 49-வது ஓவரில் துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இதனால் ஐந்து ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது.

2016-ல் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்சர்கள் விளாசி அணியை வெற்றிபெற வைத்தார். இந்த போட்டியை வாழ்நாளில் பென் ஸ்டோக்ஸால் மற்ற முடியாது.



நியூசிலாந்துக்கு எதிரான பிராத்வைட்டின் ஆட்டம் எனக்கு கொல்கத்தா போட்டியை ஞாபகப்படுத்தியது என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டரில் ‘‘முதலில் விராட் கோலி, தற்போது பிராத்வைட், நான் இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், நியூசிலாந்துக்கு எதிராக பிராத்வைட் விளையாடியது நம்பமுடியாத வகையில் இருந்தது. 2016-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டம் மீண்டும் நடைபெறுவது போன்று இருந்தது’’ என்று பதிவிட்டுள்ளார்.

Similar News