செய்திகள் (Tamil News)

உலகக்கோப்பை - பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்

Published On 2019-06-26 18:29 GMT   |   Update On 2019-06-26 18:36 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் இருவரின் அதிரடியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கையில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கப்தில் 5 ரன் எடுத்த நிலையில் முகமது அமிர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அமிர் உடன் இணைந்து பந்து வீசிய ஷாஹீன் அப்ரிடி துல்லியமாக பந்து வீச கொலின் முன்றோ (12), ராஸ் டெய்லர் (3), டாம் லாதம் (1) அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 46 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து நான்கு விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.



5-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் ஜேம்ஸ் நீஷம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை நிலைநிறுத்த போராடியது. ஆனால் அணியின் ஸ்கோர் 83 ரன்னாக இருக்கும்போது கேன் வில்லியம்சன் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

6-வது விக்கெட்டுக்கு நீஷம் உடன் கொலின் டி கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து 47.4 ஓவரில் 215 ரன்கள் எடுத்திருக்கும்போது கிராண்ட்ஹோம் 71 பந்தில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்தது.



நீஷம் கடைசி வரை நின்று போராட நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்தது. நீஷம் 112 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும் அமிர் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது.  தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் களம் இறங்க ஆட்டம் வெற்றி பாதையை நோக்கி பயணித்தது.  ஆனால் ஆட்டத்தின் 2.6 வது ஓவரில் பெர்குசன் வீசிய பந்தில் பஹார் ஜமான் 9 (10) ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  அதனையடுத்து பாபர் அசாம் களம் இறங்க ஆட்டம் சூடுபிடித்தது.  இதனிடையே ஆட்டத்தின் 10.2வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இமாம் உல்-ஹக் 19 (29) ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த முகமது ஹபீஸ் 50 பந்துகளை சந்தித்து 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வில்லியம்சன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  ஆட்டத்தின் 26.2 வது ஓவரில் பாபர் அசாம் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.



அடுத்த களம் இறங்கிய பாக். அணி வீரர் ஹாரிஸ் சோகைல், பாபர் அசாமிற்கு துணையாக நின்று ரன்களை குவிக்கத் தொடங்கினர். ஆட்டத்தின்  41.5 வது ஓவரில் 3 விக்கெட்களை மட்டும் இழந்த பாக். ஜோடி 200 ரன்களை கடந்தது.  ஆட்டத்தின் 44.3 வது ஓவரில் சோகைல் அரை சதத்தை கடந்தனர்.  இருவரின் ஜோடியை பிரிக்க எண்ணிய நியூசிலாந்து அணி வீரர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.  இதனிடையே ஆட்டத்தின் 47.3 வது ஓவரில் பாபர் அசாம் தனது சதத்தை பதிவு செய்தார்.    ஹாரிஸ் சோகைல் 68(76) ரன்கள் கடந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன் மூலம்  ஆட்டத்தின் 49.1 ஒவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் 241 ரன்கள் எடுத்தது.  முடிவில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி தரப்பில் அதிக பட்சமாக பாபர் அசாம் 101 (127), முகமது ஹபீஸ் 32 (50), ஹாரிஸ் சோகைல் 68 (76) ரன்களை எடுத்தனர்.

நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட், பெர்குசன், வில்லியம்சன்  தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர்.

Similar News