செய்திகள் (Tamil News)

நாங்கள் 1992 உலகக்கோப்பை முடிவுகள் பற்றி சிந்திக்கவில்லை: பாபர் ஆசம்

Published On 2019-06-27 10:22 GMT   |   Update On 2019-06-27 10:22 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 1992-ம் ஆண்டு தொடருடன் ஒப்பிடுவது குறித்து சிந்திக்கவில்லை என்று பாபர் ஆசம் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்ததும், லீக் சுற்று ஆட்டங்கள் சூடுபிடித்தன.

பாகிஸ்தான் தொடக்கத்தில் சரிவை சந்தித்தது. அதன்பின் சில வெற்றிகள் பெற்றது. நியூசிலாந்து அணி தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டது.

1992 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு லீக் ஆட்டத்தில் என்ன ரிசல்ட் கிடைத்ததோ? அதே ரிசல்ட் தற்போதும் கிடைத்துள்ளது. தோல்வியடையாமல் வந்த நியூசிலாந்தை நேற்று வீழ்த்தியது.

இதனால் 1992-ல் அரையிறுதிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை வென்றதுபோல் தற்போதும் பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டம் கிட்டும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த பாபர் ஆசம் அப்படி நினைக்கவில்லை. அவர் இதுகுறித்து கூறுகையில் ‘‘1992-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றித் தோல்வி முடிவுகளுடன், தற்போதைய உலகக்கோப்பை தொடரின் முடிவுகளை ஒப்பிட்டு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

ஆனால், நாங்கள் 1992 உலகக்கோப்பையுடன் ஒப்பிடுவதை பற்றி சிந்திக்கவில்லை. இந்தத் தொடரில் எங்களுக்கு இருக்கும் போட்டிகள் அனைத்து வாழ்வா? சாவா? போன்றது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம்.



நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கிடைத்த சதம் என்னுடைய சிறந்த சதங்களில் ஒன்று. ஏனென்றால் கட்டாயம் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியில் கிடைத்தது. போட்டிக்கு முன் பெர்குசனை சிறந்த வகையில் ஆட வேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தோம்.

ஆனால், ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், சான்ட்னெரை எதிர்த்து கவனமாக விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நாங்கள் இங்கிலாந்தில் விளையாடும்போதெல்லாம் ரசிகர்கள் அதிக அளவில் வருகை வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். தொடர்ந்து நீடிப்பதால் நான் பெருமையடைகிறேன்’’ என்றார்.

Similar News