செய்திகள் (Tamil News)
பும்ரா

பவர்பிளேயில் பும்ரா, புவி அசத்தல் பவுலிங்: நியூசிலாந்து 27-1

Published On 2019-07-09 10:26 GMT   |   Update On 2019-07-09 10:26 GMT
மான்செஸ்டர் அரையிறுதி ஆட்டத்தில் முதல் 10 ஓவரில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டார். முகமது ஷமிக்கு இடமில்லை.

மார்ட்டின் கப்தில், ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை புவி வீசினார். முதல் பந்தை மார்ட்டின் கப்தில் எதிர்கொண்டார். பந்து கால் பேடை தாக்கியது. இந்திய வீரர்கள் அப்பீல் கேட்க நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் இந்தியா ரிவியூ கேட்டது. பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியில் சென்றதால் இந்தியாவின் ரிவியூ முதல் பந்திலேயே பறிபோனது. புவி வீசிய முதல் ஓவரிலும், பும்ரா வீசிய 2-வது ஓவரிலும் நியூசிலாந்து ரன்ஏதும் அடிக்கவில்லை. புவனேஷ்வர் குமார் வீசிய 3-வது ஓவரின் 5-வது பந்தில்தான் நியூசிலாந்து முதல் ரன்னை அடித்தது.



 4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் மார்ட்டின் கப்தில் ஆட்டமிழந்தார். அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். இவர் நிக்கோல்ஸ் உடன் இணைந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஸ்கோர் மந்த நிலையில் சென்றது.

பும்ரா மற்றும் புவி  இணைந்து முதல் 9 ஓவரில் 23 ரன்களே விட்டுக்கொடுத்தனர். 10-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் நியூசிலாந்து நான்கு ரன்கள் சேர்க்க பவர்பிளேயான முதல் 10 ஓவரில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

Similar News