செய்திகள் (Tamil News)
சபரிமலையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

சபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2018-01-02 07:54 GMT   |   Update On 2018-01-02 07:54 GMT
புத்தாண்டையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதன்காரணமாக சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய 12 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.

சபரிமலை சுவாமி ஐயப் பன் கோவிலில் வருகிற 14-ந்தேதி பிரசித்திபெற்ற மகரவிளக்கு பூஜை நடை பெறுகிறது. அப்போது அங்குள்ள பொன்னம்பல மேட்டில் சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தருவார் என்பது ஐதீகம்.

மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி மாலையில் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி இருமுடி கட்டிய ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். நேற்று புத்தாண்டையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் பம்பையில் இருந்தே சன்னிதானத்திற்கு பக்தர்கள் வரிசையில் செல்லும் நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய 12 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.

மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதி களும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் கோவில் பிரசாதமான அரவணை, அப்பம் போன்றவை பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது. கூட்ட நெரிசலை தடுக்க கூடுதலாக பிரசாத ஸ்டால் களும் திறக்கப்பட்டு உள்ளது. 

Similar News