அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 ரூபாயில் முடி வெட்டும் தொழிலாளி
- புதுவை சலூன் கடைக்காரருக்கு குவியும் பாராட்டு
- புதுவை சாரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
கால மாற்றத்திற்கேற்ப தொழில்களிலும் நவீன மாற்றங்கள் உருவாகி வருகிறது.
இதில் சலூன் கடைகளும் தப்பவில்லை. கிராமங்களில் மரத்தடியிலும், புறநகர் பகுதிகளில் சிறிய கடைகளிலும் இருந்த முடி திருத்தகங்கள் இன்று நவீனமயமாகியுள்ளது. நாடு முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த கடைகளை நடத்தி வருகின்றன.
இந்த கடைகளில் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை முடி திருத்தம், முகம் அழகுபடுத்துதல், தாடியை அழகுபடுத்துதல் போன்றவை செய்யப்படுகிறது.
தற்போதைய இளைஞர்கள் விதவிதமான சிகை அலங்காரத்தோடு உலா வருகின்றனர். இந்த நிலையில் புதுவை சாரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் முடி திருத்தம் செய்ய ரூ.100 முதல் ரூ.150 வரை கட்டணமாக வசூலிக்கிறார். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ரூ.10 கட்டணத்தில் முடி திருத்தம் செய்கிறார்.
தினமும் காலையில் 7 மணி முதல் 10 மணி வரை மட்டும் இந்த சலுகை கட்டணத்தில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்கிறார். அதன்பிறகு வழக்கமான வாடிக்கையாளர்களுக்கான பணியை தொடங்குகிறார். புதுவையில் ஒரு சில தினங்களில் பள்ளி திறக்க உள்ள நிலையில் இந்த கடையை பற்றி தெரிந்த பெற்றோர், மாணவர்களோடு காலையிலேயே இங்கு வந்து விடுகின்றனர்.
ரூ.10-க்கு டீ குடிக்கக்கூட முடியாத நிலையில் ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்காக முடிதிருத்தம் செய்யும் விஜய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுகுறித்து விஜய்யிடம் கேட்டபோது, ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்வது தனக்கு திருப்தியளிக்கிறது. தானும் அரசு பள்ளியில் படித்தவன் என்ற முறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த சலுகையை அளித்துள்ளேன் என தெரிவித்தார்.