10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது-மாணவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
- புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது.
- தேர்வு மையத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடு, தடையின்றி மின்சார சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்து.
புதுச்சேரி:
புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது.
புதுவையில் 38, காரைக்காலில் 143 மையங்களில் தேர்வு நடக்கிறது. புதுவையில் 82 அரசு மற்றும் 147 தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 ஆயிரத்து 972 மாணவர்களும், காரைக்காலில் 25 அரசு மற்றும் 34 தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 979 மாணவர்களும் எழுதுகின்றனர். வினாத்தாள்கள் 10 வழித்தடமாக பிரித்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடு, தடையின்றி மின்சார சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்து. தேர்வுக்கு வரும் மாணவர்கள் செல்போன் உட்பட தகவல் தொடர்பு சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருந்தது. நுழைவுச்சீட்டு இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப் படவில்லை.
தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் குற்றத்துக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படும் என கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி எச்சரித்துள்ளார். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகள் நம்பிக்கையுடனும், அச்சமில்லாமலும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.