185 பள்ளி வாகனங்களை இயக்க அனுமதி மறுப்பு- அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
- பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாமை போக்குவரத்துதுறை நடத்தியது.
- பஸ்கள், மினி பஸ்கள், வேன்கள் என 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இதையொட்டி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாமை போக்குவரத்துதுறை நடத்தியது. மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையத்தில் 2 நாட்களாக முகாம் நடந்தது.
முகாமில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள், மினி பஸ்கள், வேன்கள் என 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் வாகனங்களில் ஐகோர்ட்டு வகுத்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? வாகனங்கள் முறையாக பராமரிக்கப் பட்டுள்ளதா? மாணவர்களின் பயணத்துக்கு பாதுகாப்பாக உள்ளதா? என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
2 நாள் ஆய்வில் 273 வாகனங்களுக்கு அனுமதிக்கான மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. 185 வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி, முதலுதவி பெட்டி மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த வாகனங்களில் குறைகளை நீக்கி மீண்டும் ஒரு வாரத்துக்குள் அனுமதி பெற வேண்டும். இல்லாவிட்டால் அனுமதி பெறாத வாகனங்கள் பெர்மிட் முடக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.