புதுவை, காரைக்காலில் 89.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி- கடந்த ஆண்டை விட 3.8 சதவீதம் குறைவு
- அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- மொத்தம் 129 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை புதுவை, காரைக்காலை சேர்ந்த 7 ஆயிரத்து 797 மாணவர்களும், 7 ஆயிரத்து 618 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 415 மாணவர்கள் எழுதினர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 6 ஆயிரத்து 700 மாணவர்களும், 7 ஆயிரத்து 38 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவை, காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.12 சதவீதம். புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 78.92 ஆகும். கடந்த ஆண்டு அரசு, தனியார் பள்ளிகளில் 92.92 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அரசு பள்ளிகளில் மட்டும் 85.01 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 3.8 சதவீதமும், அரசு பள்ளிகளில் மட்டும் 6.09 சதவீதமும் குறைந்துள்ளது. புதுவை, காரைக்காலில் மொத்தம் 287 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.
இதில் புதுவையில் 84, காரைக்காலில் 7 என மொத்தம் 91 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுவை, காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 107. இதில் புதுவையில் 7 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் கணிதத்தில் 61, அறிவியலில் 49, சமூக அறிவியலில் 19 பேர் என மொத்தம் 129 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ கேஎஸ்பி.ரமேஷ், கல்வித்துறை செயலர் ஜவகர், இயக்குனர் பிரியதர்ஷினி, துணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.