மருத்துவ சிகிச்சைக்கு தாய் வீட்டுக்கு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை
- சாலை விபத்தில் சுகந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
- இந்த நிலையில் சுகந்திக்கு மீண்டும் தலையில் பாதிப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு தெற்கு வீதியை சேர்ந்தவர் மணி. மீனவர். இவரது மூத்த மகள் சுகந்தி(வயது35). இவருக்கும் காரைக்காலை சேர்ந்த நாகமுத்து என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு காரைக் காலில் ஏற்பட்ட சாலை விபத்தில் சுகந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.இந்த நிலையில் சுகந்திக்கு மீண்டும் தலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற காரைக்காலில் இருந்து சுகந்தி நல்லவாட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் பயண களைப்பாக உள்ளதாக கூறி சுகந்தி படுக்கை அறைக்கு தூங்க சென்றார். சிறிது நேரம் கழித்து அவரது தாய் முத்து லட்சுமி படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது சுகந்தி மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுகந்தியை தூக்கில் இருந்து மீட்டு ஆட்டோவில் தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுகந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது தந்தை மணி கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.