தேசிய சதுரங்க போட்டியில் தமிழக மாணவர் சாதனை
- புதுவை அமலோற்பவம் பள்ளியில் நடந்த தேசிய சதுரங்க போட்டியில் தமிழக மாணவர் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.
- 27 மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்ற இந்த போட்டியில், தமிழகத்தில் மட்டுமே அதிகபட்சமாக 180 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை அமலோற்பவம் பள்ளியில் நடந்த தேசிய சதுரங்க போட்டியில் தமிழக மாணவர் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.
புதுவை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மாநில சதுரங்க கழகம் இணைந்து 33-வது ஆண்டு தேசிய சதுரங்க போட்டியை சதுரங்க வாகைசூடி 2022 என்ற தலைப்பில் நடத்தியது.
வாணரப்பேட்டை அமலோற்பவம் ஆரம்ப பள்ளி கலையரங்கில் 13 வயதிற்கு உள்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கான தொடர் சதுரங்க போட்டி நடந்தது. கடந்த 11-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடந்த போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து 508 சிறுவர்-சிறுமிகள் பங்கேற்றனர்.
27 மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்ற இந்த போட்டியில், தமிழகத்தில் மட்டுமே அதிகபட்சமாக 180 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த தாக் ஷின் அருண் முதலிடம் பிடித்தார். டெல்லியை சேர்ந்த தாவிக் வாதவன், ராஜஸ்தான் பாரதிய யாஷ் ஆகியோர் 2-ம் இடம் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஸ்னேகா ஹல்தர் முதலிடம் பிடித்தார். டெல்லி சச்சி ஜெயின், மேற்கு வங்கம் சபரியா கோஷ் ஆகியோர் 2-ம் இடத்தை பிடித்தனர்.
விழாவிற்கு, சதுரங்க கழக தலைவர் சங்கர் வரவேற்றார். அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் முன்னிலை வகித்தனர்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார். தேசிய சதுரங்க கழக ஆலோசகர் பரத்சிங் சவுகான், அமலோற்பவம் கல்விக்குழும தாளாளர் லூர்துசாமி, மாநில சதுரங்க கழக செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.