குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் காலதாமதமாக வந்தால் நடவடிக்கை
- அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வரவேண்டும்.
- இனி பொதுமக்களை ஒருபோதும் அலைக்கழிக்க கூடாது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் , காரைக்கால் மதகடியில் அமைந்துள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்ட அமைச்சர், ஒரு சிலர் காலதாமத்துடன் வருகை தருவதாக கூறப்படுகிறது. இனி, அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வரவேண்டும். காலதாமதத்துடன் வந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
மேலும், அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பொதுமக்கள் சிலர் நிற்பதை பார்த்த அமைச்சர், அவர்கள் ஏன் காத்துகிடக்கிறார்கள்? அவர்களது குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து உடனுக்குடன் அவர்களை அனுப்பி வைக்கவேண்டும். இனி பொதுமக்களை ஒருபோதும் அலைக்கழிக்க கூடாது. முக்கியமாக, பொதுமக்களிடமிருந்து எனக்கு எந்தவித குறைகளும் வராத வண்ணம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி செய்ய வேண்டும் என்றார்.