விவசாயிகள் கடனை மத்திய பா.ஜனதா அரசு தள்ளுபடி செய்யவில்லை
- முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் குற்றச்சாட்டு
- ரூ.1 1/2 லட்சம் கோடி மதிப்புள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை ரூ.40 ஆயிரம் கோடிக்கு விற்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் வருமானம் ஈட்டி வந்த பல துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் விற்கப்பட்டு விட்டது. ரெயில்வே, எல்.ஐ.சி, பி.எஸ்.என்.எல், பெட்ரோலிய நிறுவனங்களில் தனியாரை நுழைப்பது அதிகரித்துள்ளது.
நல்ல வருமானத்தோடு இயங்கி வரும் ரூ.1 1/2 லட்சம் கோடி மதிப்புள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை ரூ.40 ஆயிரம் கோடிக்கு விற்க மத்திய அரசு தயாராகி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது.
ஆனால் விவசாயிகள், சிறு வியாபாரிகள், மாணவர்களுக்கு எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. கடந்த 57 ஆண்டுகளில் நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் ரூ.54 லட்சம் கோடி. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் வாங்கியுள்ள மொத்த கடன் ரூ.128 லட்சம் கோடி. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2014-ல் ரூ.62 ஆக இருந்தது. இன்று ரூ.83 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் உலக வங்கியில் இந்தியாவின் தங்கம், அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்துள்ளது. எனவே பா.ஜனதாவின் மக்கள் விரோதபோக்கை புரிந்து பாராளுமன்ற தேர்தலில் புறந்தள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.