புதுச்சேரி

கோப்பு படம்

பாட்டு கச்சேரியில் மோதல்

Published On 2022-08-11 08:48 GMT   |   Update On 2022-08-11 08:48 GMT
  • சேதராப்பட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
  • கோவில் விழாவையொட்டி அங்கு நடந்த பாட்டு கச்சேரியை பார்க்க ராம்குமார் சென்றார்.

புதுச்சேரி:

வில்லியனூரில் கோவில் விழாவையொட்டி நடந்த பாட்டு கச்சேரியில் ஏற்பட்ட மோதலில் தனியார் நிறுவன ஊழியருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

வில்லியனூர் அருகே அகரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (வயது23). இவர் சேதராப்பட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவில் விழாவையொட்டி அங்கு நடந்த பாட்டு கச்சேரியை பார்க்க ராம்குமார் சென்றார். அங்கு கூட்ட நெரிசலில் நின்று ராம்குமார் பாட்டி கச்சேரியை ரசித்துகொண்டிருந்த போது அங்கு வந்த கணுவாய்ப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ராம்குமாரிடம் இங்கு நிற்க வேண்டாம் எனது மகன்களுக்காக இடம் பிடித்து வைத்திருக்கிறேன். எனவே இங்கிருந்து சென்று விடு என வெங்கடேசன் கூறினார்.

அதற்கு ராம்குமார் நான் இங்கிருந்து செல்ல முடியாது என்று மறுத்தார். இதனால் ராம்குமாருக்கும், வெங்கடேசனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது வெங்கடேசன் செல்போனில் பேசி தனது மகன்களான தினகரன் மற்றும் விஜயகுமாரை அழைத்தார்.

இதையடுத்து சற்று நேரத்தில் தினகரன், விஜயகுமார் மற்றும் அவருடன் மற்றொருவர் அங்கு வந்தனர். அவர்கள் ராம்குமாரிடம் எங்கள் ஊரில் வந்து எங்களது அப்பாவிடமே தகராறு செய்கிறாயா? என கூறி தகாத வார்த்தைகளால் திட்டினர்.

இதனை ராம்குமார் தட்டிக்கேட்ட போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து ராம்குமாரை தடியாலும், கல்லாலும் தாக்கினர். மேலும் வெங்கடேசன் அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து ராம்குமாரின் தலையில் குத்தினார். அதோடு ராம்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த ராம்குமாரை அவரது நண்பர்கள் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் ராம்குமார் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News