ஏமாற்று அரசியலை தி.மு.க.வும், காங்கிரசும் செய்கிறது
- அன்பழகன் தாக்கு
- முதல்-அமைச்சர் நாராயணசாமி மாநில அந்தஸ்தை ரங்கசாமியால் பெற முடியாது என்று சவடால் விடுகிறார்.
புதுச்சேரி:
நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிடாத தி.மு.க.வை கண்டித்து புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் அண்ணாசிலை பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவை தலைவர் அன்பானந்தம், ஜெ.பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
கடந்த 2013-ம் ஆண்டு மத்தியில் தி.மு.க கூட்டணி ஆட்சி இருந்த போது பாராளுமன்றத்தில் நீட் தேர்வுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வும் காங்கிரசும் இணைந்து நீட் தேர்வை கொண்டு வந்தனர். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என ஒன்றல்ல இரண்டல்ல 3 தலைமுறையினரும் இந்த 10 ஆண்டில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என நாடகம் ஆடி வருகின்றனர்.
நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களிடம் இருக்கிறது என்றும், தி.மு.க.வுக்கு வாக்களித்தால் முதல் கையெழுத்தில் நீட் ரத்து செய்யப்படும் என கூறிய தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் 30 மாதங்கள் ஆகியும் ஏன் இன்னும் கையெழுத்திடவில்லை..? தி.மு.க.வின் பொய்யை நம்பி தமிழகத்தில் ஆண்டு தோறும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர்.
கடந்த பல வருடங்களாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க.வும், காங்கிரசும் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்காமல் மக்களை வஞ்சித்தனர். ஆனால் இன்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மாநில அந்தஸ்தை ரங்கசாமியால் பெற முடியாது என்று சவடால் விடுகிறார்.
நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிற்கு அருகில் உயர் பதவியில் இருந்த நாராயணசாமி ஏன் புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்தை பெற்றுத் தரவில்லை? தலைமுறை தலைமுறையாக ஏமாற்று அரசியலை தி.மு.க.வும், காங்கிரசும் செய்கின்றனர்.
நீட் தேர்வு ரத்துக்கான ரகசியத்தை வெளியிட்டு விட்டு தி.மு.க போராட்ட த்தை நடத்த வேண்டும். தி.மு.க.வின் பொய்யான பசப்பு வார்த்தைகளை மாணவர்கள் நம்பாமல் ஆண்டுதோறும் தங்களை நீட் தேர்வுக்காக தயார்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் புதுவை மாநில துணைத் தலைவர் ராஜாராமன், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், ஆர்.வி.திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர்கள் கணேசன், மகாதேவி, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணை செயலாளர்கள் உமா, எம்.ஏ.கே.கருணாநிதி,
பி.எல்.கணேசன், குணசேகரன், நாகமணி, மூர்த்தி, காந்தி, ஜெயசேரன், குமுதன், மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன்,
மேற்கு மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில
எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.