ஜிப்மருக்கு களங்கம் வரும் வகையில் அரசியல் செய்ய கூடாது
- முன்னாள் எம்.பி அறிவுறுத்தல்
- மத்திய நிறுவனத்தை ஆய்வு கூட்டம் என்ற பெயரில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்கக் கூடாது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மரின் பணிகளை ஆய்வு செய்ய நடந்த கூட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள நியாயத்தை உணர்ந்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஜிப்மரை மக்களுக்கு உதவும் நிறுவனமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இந்தியாவின் 5 சிறந்த மருத்துவ நிறுவனங்களில் ஒன்றான ஜிப்மரின் புகழுக்கு களங்கம் விளை விக்கும் வகையில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. ஜிப்மர் தன்னாட்சி பெற்ற நிறுவனம். அதனை நிர்வகிக்க நிர்வாகக் குழு, செயற்குழு இருக்கிறது. அதில் புதுவை எம்.பி, தலைமை செயலர் உறுப்பினர்களாக உள்ளனர். பரிந்துரைத்த விதிகள் தவறாக இருந்தால் அக்குழு தான் நீக்க வேண்டும்.
மாநில அரசு தனக்குத் தானே ஒரு குழுவை அமைத்துக் கொண்டு அதன் ஆலோசனைகளை ஜிப்மர் நிர்வாக குழுவிடம் எழுத்து மூலம் கூறி குறைகளை களைந்து மக்களுக்கு நல்லது செய்யலாம். பாராளு மன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மத்திய நிறுவனத்தை ஆய்வு கூட்டம் என்ற பெயரில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்கக் கூடாது. ஜிப்மர் மருத்துவமனை மட்டும் அல்ல அது உயர்ந்த கல்வி போதிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடும் சமூக சேவைக்காக பாடுபடும் ஒரு தரமான தலைசிறந்த நிறுவனம் ஆகும். அதன் புகழைக் கட்டிக்காப்பது புதுவையின் புகழைக்காப்பதற்கு சமமாகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.