போலீசார் பிடிக்க சென்றபோது கஞ்சா போதையில் சாக்கடைக்குள் விழுந்த வாலிபர்
- சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாலிபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
- போதை வாலிபரை ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் ஜீவா நகர் பகுதியில் புதிதாக கட்டி வரும் பாலத்தின் கீழே 3 வாலிபர்கள் கஞ்சா அடித்து கொண்டு கூச்சலிட்டு வருவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாலிபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் 2 வாலிபர்களை போலீசார் துரத்தி பிடித்தனர். ஒருவர் போலீஸ் பிடியில் சிக்காமல், அரைமணி நேரமாக ஆட்டம் காட்டினார்.
மேலும் அங்கிருந்த வாய்க்காலில் குதித்து சேறும், சகதியுடன் தப்பியோடினார். பின்னர் வெங்கட்டா நகரில் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டின் வாசலில் சேறும், சகதியும் சிந்தி கிடப்பதை அடையாளமாக கொண்டு அங்கு வாலிபர் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
அவரை வெளியே வருமாறு அழைத்தனர். அவர் வர மறுத்ததோடு, கஞ்சா போதையில் தன்னை விட்டு விடும்படி கதறி அழுதார். அங்கும் இங்குமாக ஆட்டம் காட்டி, கடைசியில் நீதிபதி வீட்டுக்கு நேரடியாக வந்துட்டியா. ஒழுங்கா வெளியே வந்துடுப்பா... என போலீசார் மன்றாடினர். அவர் வெளியே வர மறுத்ததால், உள்ளே சென்று தரதரவென வெளியே இழுத்து வந்து அவர் மீது தண்ணீர் ஊற்றி சேறும் சகதியை கழுவி குளிக்க வைத்தனர்.
பின்னர் போதை வாலிபரை ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில், பெரியார் நகரை சேர்ந்த அரவிந்த் என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது, கஞ்சா வாலிபரை போலீசார் பிடிக்க சென்றபோது அவர் செய்த ரகளையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.