புதுச்சேரி

இறந்த நாய்க்கு இறுதி சடங்கு நடத்தி வீட்டிலேயே அடக்கம் செய்த குடும்பத்தினர்

Published On 2024-05-17 08:53 GMT   |   Update On 2024-05-17 08:53 GMT
  • மதியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ரேம்போவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
  • இறுதி சடங்கு நிகழ்ச்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

புதுச்சேரி:

புதுவை கதிர்காமத்தைச் சேர்ந்தவர் மதி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு டாபர்மேன் நாய்க்குட்டி ஒன்றை ஆசையாக வாங்கி அதற்கு ரேம்போ என பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார். ரேம்போ அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே கடந்த 10 ஆண்டாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் ரேம்போவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் ரேம்போ திடீரென உயிரிழந்தது.

ரேம்போவின் மறைவு மதியின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது குடும்பத்தில் ஒருவராக இருந்து இறந்த செல்லப்பிராணி ரேம்போவுக்கு மனிதர்களுக்கு செய்யும் இறுதி சடங்குகள் போல் செய்து அடக்கம் செய்ய மதி குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதற்காக ரேம்போ இறந்ததை தெரியப்படுத்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர். தொடர்ந்து வீட்டின் முன்பு பந்தல் அமைத்து சவப்பெட்டியில் ரேம்போவின் உடலை வைத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

மதியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ரேம்போவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் மதியின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினர். இதனையடுத்து ரேம்போவுக்கு இறுதி சடங்குகள் செய்து வீட்டிற்குள்ளேயே அடக்கம் செய்தனர். இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News