தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டில் மோசடி
- எதிர்கட்சித்தலைவர் சிவா குற்றச்சாட்டு
- புதுவை கவர்னர் தமிழிசை அந்த இடங்களை கேட்டு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.
புதுச்சேரி:
புதுவை அம்பேத்கரிய, பெரியாரிய பொதுவுடமை இயக்கங்கள் சார்பில் சிறப்பு மாநாடு புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் முன்னிலை வகித்தனர். எதிர்கட்சித்தலைவர் சிவா சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில், பட்டியலின மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். புதிய கல்விகொள்கை, விஷ்வ கர்மயோஜனா திட்டங்களை திரும்ப பெற வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
மேலும், கோரிக்கைகளை டிசம்பர் 4-ந் தேதி பாராளுமன்றம் எதிரே பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜனாதிபதிக்கு ஒரு கோடி கையெழுத்துடன் மனு சமர்பிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டில் எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அரசுக்கு 50 சதவீத மருத்துவ இடங்களை மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுவை கவர்னர் தமிழிசை அந்த இடங்களை கேட்டு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.
தனியார் மருத்துவ கல்லூரிகள், அரசுக்கு அறித்த இடஒதுக்கீட்டில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. மாணவர் சேர்க்கையில் வெளிப் படைத் தன்மை இல்லை. மோசமான ஆட்சி புதுவையில் நடக்கிறது. ஆதிதிராவிட மக்களுக்கு ஆளும் அரசு எந்த திட்டங்களையும் செயல் படுத்தாமல் மிகப்பெரும் அநீதி இழைத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் தலித், பழங்குடி யின இயக்கங் களின் கூட்டமைப்பு, தலித் அமைப்புகளின் கூட்ட மைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.