விநாயகர் சிலைகளை கரைக்க 2 கட்டமாக ஏற்பாடு
- காட்டேரிக்குப்பத்தில் 12 அடி, வில்லியனூரில் 10 அடி உயர விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- இளைஞர்கள் சங்கங்கள் சார்பில் 100 க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று உற்சாகமாக கொண்டா டப்பட்டது.
இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் புதுவை முழுவதும் 150 இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர விநாயகர் சிலைக்கு நேற்று மாலை பூஜை செய்யப்பட்டது.
விழா பேரவை தலைவர் குமரகுரு தலைமை வகித்தார். முன்னாள்
எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வரவேற்றார். இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம்,
எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கரன், பா.ஜனதா தலைவர் சாமிநாதன், விழா பேரவை பொதுச் செயலாளர் சனில்குமார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
காலாப்பட்டில் 19 அடி, பெரியார் நகர், வைத்திக்குப்பத்தில் 14 அடி, கோரிமேடு, காட்டேரிக்குப்பத்தில் 12 அடி, வில்லியனூரில் 10 அடி உயர விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
புதுவை நகர், புறநகர் பகுதியில் 5 அடி முதல் 21 அடி வரை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதுதவிர ஆங்காங்கே குடியிருப்போர், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஒட்டுனர்கள், இளைஞர்கள் சங்கங்கள் சார்பில் 100 க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப் பட்டுள்ளது.
புதுவையில் பல்வேறு பகுதி களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை 3 இடங்களில் விஜர்சனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் சிலைகள் நாளை (20-ந் தேதி) காலாப்பட்டு, நல்லவாடு ஆகிய கடற்கரை பகுதிகளில் விஜர்சனம் செய்யப்படுகிறது.
2-ம் கட்டமாக நகரப்பகுதி முழுவதும் உள்ள சிலைகள் வருகிற 22-ந் தேதி கடற்கரை சாலையில் விஜர்சனம் செய்யப்படுகிறது. 22-ந் தேதி மதியம் நகர பகுதியில் உள்ள சிலைகள் அனைத்தும் சாரம் அவ்வை திடலுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து நேருவீதி, காந்திவீதி, படேல் சாலை வழியாக கடற்கரை சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்படுகிறது.