காரைக்காலில் அரசு நர்சிங்கல்லூரி தொடங்கப்படும்-முதல் -அமைச்சர் ரங்கசாமி தகவல்
- தனியார் மருத்துவகல்லூரி, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி கொடுக்கிறது.
- எளிதாக கல்வி கொடுக்கும் மாநிலமாக புதுவை எப்போதும் திகழும்.
புதுச்சேரி:
புதுவை தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் சார்பில் காந்தி திடலில் 3 நாட்கள் உயர் கல்வி கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலாளர்துறை சார்பில் ஆண்டுதோறும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.
புதுவையில் 12-ம் வகுப்பு படித்தவர்களில் பலருக்கும் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளில் இடம் கிடைத்துவிடும். இதற்காக நகரம், கிராமங்களில் பல கல்லூரிகள் அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு அரசு கல்லூரிகளில் சுலபமாக இடம் கிடைத்துவிடும். மதிப்பெண் குறைவாக எடுப்பவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி செல்கின்றனர். புதுவை மட்டுமின்றி தமிழ்நாடு, வெளிநாடு களிலும் படிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த விபரங்களை கண்காட்சியில் பெறலாம். மாணவர்கள் விரும்பும் பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படிப்பு தொடங்கப்படும். தனியார் மருத்துவகல்லூரி, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி கொடுக்கிறது.
இதனால் புதுவை மாணவர்கள் எளிதாக உயர்கல்வி கற்க முடியம். எளிதாக கல்வி கொடுக்கும் மாநிலமாக புதுவை எப்போதும் திகழும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விழாவில் சபாநாயகர் செல்வம், துறை செயலர் முத்தம்மா, இயக்குனர் மாணிக்கதீபன், துணை ஆணையர் ராகினி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பு அதிகாரி மேரிஜோசப்பின்சித்ரா நன்றி கூறினார். நாளை 21-ந் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடக்கிறது.