44 ஆண்டுகளுக்கு முன்பு படித்த அரசு பள்ளி மாணவர்கள் சந்திப்பு
- புதுவையின் பல பகுதிகளில் இருந்து, குடும்பத்தோடு கலந்து கொண்டு தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
- ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1978-1982 ம் ஆண்டுகளில் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதுச்சேரி மாசுகட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் ரமேஷ், முன்னிலை வகுத்தார். முன்னால் தலைமையாசியர். அரிகரன், தேசியக்கொடி ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழ்செல்வி வரவேற்றார். இப்பள்ளியில் பணிபுரிந்து இறந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான குறும்படத்துடன் கூடிய நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
அதில் மறைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நினைத்து அனைவரும் கண்கலங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் தமிழகம் மற்றும் புதுவையின் பல பகுதிகளில் இருந்து, குடும்பத்தோடு கலந்து கொண்டு தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பண்ருட்டியிலிருந்த வந்த முன்னாள் மாணவர் வெங்கடேசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் 100 பலாபழங்களை பரிசாக வழங்கினார். தொடந்து ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அனைவருக்கும் அருசுவை உணவு அளிக்கப்பட்டது. முன்னாள் மாணவர்களின் சார்பாக இப்பள்ளியில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியினை பி.எஸ்.என்.எல் உதவி பொறியாளர் அரிதாஸ் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர்கள், காமராஜ், தேவநாதன். சவுந்தராஜன், ரவி, இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர். நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.