செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்
- அன்பழகன் வலியுறுத்தல்
- பணியில் உள்ள செவிலியர்கள் பணி சுமையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் 2 மணி நேரம் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு புதுவை மாநில அதிமுக செயலாளர் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுகாதாரத் துறையில் நீண்ட காலமாக காலியாக உள்ள சுமார் 700-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை நிரப்பவில்லை. பணியில் உள்ள செவிலியர்கள் பணி சுமையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டம் அரசின் தொடர் அலட்சியத்தால் செவிலியர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விதிப்படி 5 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் பணி செய்ய வேண்டும். ஆனால் 40 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் தற்போது பணி செய்கின்றனர். 10 ஆண்டாக செவிலியர் எண்ணிக்கை அதிகப்படுத்தவில்லை.
கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் துச்சம் என மதித்து ஒப்பந்த செவிலியர் பணி செய்தனர். காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த செவிலியர்கள், தேசிய சுகாதார இயக்க செவிலியர்கள் மூலம் நிரப்ப வேண்டும்.
அரசு உயர் அதிகாரிகள் தங்களது வீண் பிடிவாதத்தால் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்பாமல் வேடிக்கை பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
7-வது சம்பவளக் குழுவில் உயர்த்தப்பட்ட அலவன்ஸ் நிலுவை தொகையைக்கூட இன்றுவரை வழங்கவில்லை. இதற்கு நிதித்துறை செயலர் மற்றும் தலைமைச் செயலரின் பொருப்பற்ற செயல்பாடே காரணம். முதல்-அமைச்சர் செவிலியர்களை அழைத்து பேசி நியாயமான அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.